கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இயங்கி வரும் த.வீ.ச ( டிவிசி )அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வந்த திருப்பாணாழ்வார் தெருவை சேர்ந்த ராஜன் மகன் விஷ்ணு (14),நேற்று முன்தினம் நண்பருடன் சிறப்பு வகுப்பை புறகணித்து விட்டு பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக சுவரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் விஷ்ணுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவரின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு, மாணவனின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கூலி தொழிலாளியான தாய் கவிதா(55) கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் பள்ளி நேரத்தில் சுவர் ஏறி வீட்டிற்கு செல்ல முயன்றது எப்படி, பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




