மலேசியாவில் முனைவர் பட்டம் படித்து வரும் மாணவர் பாரதிதாசன். இவர் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் படித்து வருகிறார். இவர் தனக்கு இத்திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு நிதி வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் ஆண்டு நித வழங்கப்படவில்லை என்றும், இதனால் தனது கல்வி பாதிக்கப்படுவதாகவும் உறுக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சமூகநீதித் துறை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தனது 2-ம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை அரசு வழங்கவில்லை என்று சமூகவலைதளத்தில் காணொளி வெளியிட்டார். அதற்கு தமிழக சமூகநீதி துறை விளக்கம் வெளியிட்டுள்ளது.மாணவர் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவி திட்டத்தின்கீழ் முதலாம் கல்வி ஆண்டான 2025-2026 இல் Ph.D படிப்புக்கு மொத்தம் ரூ.36.00 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாணவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவினப்பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.
மேலும் மாணவர் பாரதிதாசனிடம் இரண்டாம் ஆண்டு கல்விக்கான ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, மாணவர் தெரிவித்துள்ள ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் அம்மாணவரின் ஆராய்ச்சிக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து 17-ஆம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாணவர் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 இலட்சம் மற்றும் இரண்டாமாண்டிற்கு ரூ.12.00 இலட்சம் ஆக மொத்தம் ரூ.48.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவரது காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




