பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி தேவை- நிதிஷ் வலியுறுத்தல்

பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை உருவாக்கும் நேரமிது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.  பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.…

பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை உருவாக்கும் நேரமிது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மீண்டும் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தற்போது நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் 3 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். அப்போது, 2024ம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இல்லை என்றும் நிதிஷ் குமார் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சிபிஐ (எம்) கட்சியின் பொதுச்செயலாளர் சிதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், எனக்கு பிரதமராகும் எந்த ஆசையும் இல்லை. பாஜகவுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியை உருவாக்கும் நேரமிது. எனக்கு சிபிஐ உடன் நீண்ட தொடர்பு உண்டு. காங்கிரஸ், அனைத்து இடதுசாரி கட்சிகள், பாஜவுக்கு எதிராக கோஷம் எழுப்பும் மாநில கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த கட்சிகளை ஒன்றிணைப்பதில் தான் எங்கள் முழு கவனமும் உள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.