‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’ – காவல் நிலையத்தில் புகார்
அதிமுக அலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொள்ளையடித்துச் சென்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாவட்ட கழக செயலாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை கழகத்தில் நேற்று ஓ.பி.எஸ் மற்றும் ஈபி.எஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கல்வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர். இந்த தாக்குதலில் போலீசார் உட்பட 42 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக அதிமுகவினர் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதிமுக தலைமை கழகத்தை வில்லங்க சொத்தாக அறிவித்து வருவாய் கோட்ட அலுவலர்கள் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். இந்நிலையில், ஈ.பி.எஸ் ஆதரவாளரும், அதிமுக மாவட்ட கழக செயலாளருமான ஆதிராஜாராம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘5 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாவுருட்டி அருவி திறப்பு’
அதில் ஏற்கனவே கடந்த 8ஆம் தேதி சமூக விரோதிகள் சிலர் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நுழையப் போவதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு கேட்டுக் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் ராயப்பேட்டை அலுவலகத்தில் மனு அளித்திருந்தோம். இந்நிலையில் நேற்று காலை அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைப்பற்றப்போவதாகத் தகவல் வந்ததால் அங்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்போது ஓ.பி.எஸ் மைக்கில் யாராக இருந்தாலும் வெட்டுங்கள் எனக் கூறியதின் அடிப்படையில் சுமார் 300 நபர்கள் கற்கள், கத்தி, கட்டை, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தொண்டர்களையும், பொதுமக்களையும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓ.பி.எஸ் உத்தரவின் பேரில் தலைமை அலுவலக கதவை கடப்பாரைக் கொண்டு உடைத்து உள்ளே இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், தலைமை அலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.








