மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 100 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத
காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடிக்கு
கீழே சரிந்தது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா
பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் 257 நாட்களுக்குப் பிறகு கடந்த 8-ம் தேதி 100அடிக்கு கீழே சரிந்தது.
தற்போது கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும்,கேரள
மாநிலம், வயநாட்டிலும் கன மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக
அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாகக் குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று
அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. இன்று காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி
வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகரித்து வருவதால்
காவிரிக் கரையில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீரின் வேகம் அதிகம் காரணமாக கோட்டையூர் அடிப்பாலாறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.
-ம.பவித்ரா








