மாணவரின் உயிரை பறித்த வாகனம்: பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி!

பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நியூஸ் 7 தமிழிடம் தெரிவித்துள்ளார். சிவகங்கை…

பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நியூஸ் 7 தமிழிடம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார் பள்ளி உள்ளது. சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வருவது வழக்கம். அந்த வகையில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றிவந்த வேன், சர்வநேந்தல் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு! -

சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த பொதுமக்கள் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் முலைக்குளத்தை சேர்ந்த ஹரிவேலன் (வயது 12) என்ற 7ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு! -

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்ததாவது:

“பள்ளி நிர்வாகத்தின் மீதும், நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; அனைத்து பள்ளிகளுக்கும் வாகனங்களை ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தை, நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

செயின்ட் சார்லஸ் மெட்ரிக் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் வாகனம் இயக்கப்பட்டது குறித்து ஆர்டிஓ-விடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்தவுடன் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.