இமாச்சல பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட்டும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள 12 மிகப்பெரிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் நெடுசாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
ஏற்கனவே பெய்த கனமழையில், பியாஸ் நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்டி மாவட்டத்தில் பல வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் உள்கட்டமைப்பில் ரூ.4,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மண்டியில் உள்ள சிக்ஸ் மைல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சண்டிகர்-மனாலி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் உட்பட 1200-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குலுவில் 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் சோலன், சிம்லா, சிர்மௌர், குலு, மண்டி, கின்னவுர் மற்றும் லாஹவுல் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று உனா, ஹமிர்பூர், காங்க்ரா மற்றும் சம்பா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மண்டி, கின்னவுர் மற்றும் லாஹவுல்-ஸ்பிடி ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.







