ராஜமௌலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வருவதாக அப்படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் இதுவாகும். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராஜமௌலியின் தந்தையும் ஆர்ஆர்ஆர் பட திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் கூறியதாவது, ‘ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்கள். ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் 2-ம் பாகத்திலும் நடிப்பார்கள்.
இந்த இரண்டாம் பாகத்தை முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இதனை ராஜமௌலி அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு இயக்குநர் இயக்கலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.







