ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் மரவள்ளி விவசாயிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், கே.என்.நேரு, சேகோ கூட்டுறவு நிறுவனத்தில் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இக்கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கலப்படத்தை கண்காணிக்க 9 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் இக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
வட மாநிலங்களில் தமிழக ஜவ்வரிசியில் கலப்படம் இருப்பதாக சிலர் விளம்பரப்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ரேஷன் கடைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வழங்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.