“தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன்!

குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.