ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஏடிஜிபிக்கள் மகேஷ் குமார் அகர்வால், ஏடிஜிபி சங்கர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி, டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
75-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும், துப்பாக்கி பிடிக்க வேண்டிய கைகளில் சப்பாத்தி சுடும் அவலம் உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.








