நாடு முழுவதும் பட்டொளி வீசி பறக்கும் தேசியக் கொடி

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்களும் பிரபலங்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.  நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று…

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்களும் பிரபலங்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். 

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முதல் வரும் 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை ஏற்று சாமானிய மனிதர்கள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் வீடு ஒன்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தீவிரவாதிகளாக மாறி தற்போது பாகிஸ்தானில் உள்ளனர். இதனை தெரிவித்த அவர்களது சகோதரர், தனது சகோதரர்கள் தீவிரவாதிகளாக உள்ள போதிலும், தங்கள் வீட்டில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்படுவது வழக்கம் என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வசிக்கும் குஜராத்தின் காந்திநகர் இல்லத்திலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதோடு, அங்குள்ள குழந்தைகளுக்கு தேசியக் கொடியை வழங்கிய ஹீராபென், அவர்களோடு சேர்ந்து தேசியக் கொடியை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.

தேசியக் கொடியை 3 நாட்களுக்கு வீடுகளில் பறக்கவிட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகனப் பேரணி ஒடிஷாவின் ரூர்கேலாவில் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் தேசியக் கொடியுடன் கலந்து கொண்டு வீதி வீதியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டுப்பற்றை பறைசாற்றும் நோக்கிலான தேசியக் கொடியை பறக்கவிடும் பிரச்சாரத்திற்கு நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல், மலையாள திரை நட்சத்திரமான மோகன்லால், திருவனந்தபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமரின் அழைப்பை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி இருப்பதாகவும், 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நமக்கு துணிவையும் நாட்டுப்பற்றையும் ஊட்டட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று பதக்கம் பெற்ற வீரர் – வீராங்கணைகளோடு கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, நமது மூவர்ணக் கொடி நமது பெருமைக்குரிய அடையாளம் என குறிப்பிட்டார். நெருக்கடியான நேரங்களில் நம்மை மட்டுமல்லாது பிற நாட்டினரையும் காக்கும் வல்லமை கொண்டது நமது தேசியக் கொடி என அவர் கூறினார்.

சமீபத்தில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை தொடங்கியபோது, அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் உள்பட பலர் இந்திய தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு பாதுகாப்பாக வெளியேறியதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 3 நாட்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதை ஆங்காங்கே இருந்து வரும் செய்திகள் உணர்த்தி வருகின்றன.

  • பால. மோகன்தாஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.