டெல்லியில் இன்று முதல் மின்சார மானியம் நிறுத்தப்படுவதாக மின்சார அமைச்சர் அதிஷி கூறியிருந்தார்.
டெல்லியில் நுகர்வோருக்கு மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக ஆம் ஆத்மி அரசு வழங்கி வருகிறது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பயன்படுத்த விரும்புவர்கள் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இந்த மானிய மின்சாரத்திற்காக மொத்தம் 58 லட்சம் நுகர்வோரில், 48 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மானியம் வழங்குவதற்காக என 2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3,250 கோடியை மாநில அரசு ஒதுக்கியிருந்தது.
இந்நிலையில், டெல்லி அரசின் மின்வாரியத்துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், 46 லட்சம் மக்கள் பயன்பெறும் மின்சார மானியம் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. திங்கள் முதல் மக்கள் மானியம் இல்லாமல் கட்டணம் செலுத்த வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும், மானியம் வழங்குவது தொடர்பான ஆவணத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநரை 5 நிமிடங்கள் சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என கூறினார்.








