அனைத்து விளையாட்டுகளிலும் தோனியை போன்ற வீரர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை, சின்னம் மற்றும் கருப்பொருள் பாடலை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக்குவதற்காகவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தோனி இருவருமே தங்களது சொந்த உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச நிகழ்வுகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள் : இந்திய பொருளாதாரத்தில் 30% மேல் பங்களிக்கும் தென் மாநிலங்கள்…. – முதலிடத்தில் தமிழ்நாடு!!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து விளையாட்டுகளிலும் தோனியை போன்ற வீரர்கள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். விளையாட்டுத்துறையில் மாபெரும் எழுச்சியை உதயநிதி ஏற்படுத்துவார் என்று தாம் நம்புவதாக கூறிய முதலமைச்சர், அனைத்து விளையாட்டு வீரர்களையும் அமைச்சர் உதயநிதி சாம்பியனாக்கி வருவதாகவும் தெரிவித்தார். விளையாட்டு என்பது சமூகத்தின் கூட்டு பலத்தை வெளிப்படுத்துவதற்கு சிறந்த களம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் நாள்தோறும் ஏதேனும் ஒரு பணி விளையாட்டுத்துறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.







