சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், மண்புழு உரம் தயாரித்து அதில் லாபம் ஈட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்… திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், மண்புழு உரம் தயாரித்து அதில் லாபம் ஈட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் பத்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்திலுள்ள காய்கறி செடிகளுக்கும், தென்னை, சப்போட்டா போன்ற மரங்களுக்கும், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி பண்ணையில் இருந்து கிடைக்கும் சாணத்தை உரமாக அளித்து வருகிறார். அப்போது சாணத்தை மதிப்புக்கூட்டல் செய்து எப்படி லாபம் ஈட்டுவது என சிந்தனையில் ரமேஷ் குமார், புத்தகங்களை படித்தும், youtube-ல் வீடியோ பதிவுகளை பார்த்து மண்புழு தயாரிப்பில் களமிறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

கழிவுகளை உட்கொண்டு எச்சத்தை உரமாக்கி நிலத்தை வளப்படுத்தும் ஆற்றல் கொண்டவை “விவசாயிகளின் நண்பன் மண்புழு”. இந்தியாவில் சுமார் 384 வகையான மண்புழுக்கள் உள்ளன. அதில் ஆறு வகையான மண் புழுக்கள் மட்டுமே உரம் தயாரிக்க உகந்தவை. இவை நிரந்தர தொட்டி கட்டியும், பெரிய அளவிலான பாலித்தின் பேக் மூலமாக தயாரிக்கலாம் என்றும், இந்திய மண்புழுக்கள் ஈரத்தன்மை மிகுந்த பகுதியில் வாழும் தன்மை கொண்டுள்ளதால் எளிதில் கிடைக்காது என்றும் கூறுகிறார் ரமேஷ். இதனால் ஆப்பிரிக்கன் வகையான மண்புழுக்களை ஒரு கிலோ 500 முதல் 1000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மண்புழு உரத்தினை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் எனவும் மண்புழு உரத்தை பயன்படுத்துவதால் அனைத்து பயிர்களும் நோய் தாக்குதலில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான முறையில் வளர்வதாகவும், மேலும், ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் மண்புழு உரத்தினை பயன்படுத்துவதால் விவசாயிகள் நஷ்டத்தை தவிர்த்து நல்ல லாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார் ரமேஷ்குமார்.

மண்புழு உரம் தயாரிப்பில் நல்ல லாபம் கிடைப்பதாகவும், கூடுதலாக ஈரப்பதத்தை பராமரிக்க விடப்படும் தண்ணீரில் பாதி தண்ணீர் மண்புழுக்கள் பயன்படுத்திய பிறகே வெளியேறும் என்பதால், அந்தத் தண்ணீரையும் குழாய்கள் அமைத்து சேமித்து விற்பனை செய்வதாகவும் கூறுகிறார் ரமேஷ்குமார்.

தனது தோட்டத்தில் கிடைக்கும் மாட்டு சாணம், கோழி கழிவுகள் ஆகியவற்றை ஒரு டன் அளவில் பயன்படுத்தி 45 முதல் 60 நாட்களில் 700 கிலோ வரை மண்புழு உரம் தயாரித்து, ஒரு கிலோ பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யவதாகவும், அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யும் போது கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் ரமேஷ்குமார் தெரிவித்தார். மேலும் ஒரு கிலோ மண் புழு தயாரிக்க எட்டு ரூபாய் வரை செலவாகுவதாகவும் ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும், கூடுதல் லாபமாக மண்புழு குளியல் நீரினை ஒரு லிட்டர் 100 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

மேலும் மண்புழு உரம் தயாரிக்க மத்திய, மாநில அரசின் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது, அத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரமேஷ்குமார் வலியுறுத்தினார்.

வரும் தலைமுறையினர் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ள நிலையில் மண்புழு உயிர் உரம் தயாரித்து வெற்றி கண்ட இயற்கை விவசாயி ரமேஷ் குமார் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்பதில் ஐயமில்லை.

முழு காணொளியை காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.