“ஏடிபி டென்னிஸ் போட்டிகள் தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வர அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் விளையாட்டுத் தலைநகராக சென்னையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று
தொடங்கியுள்ள நிலையில் போட்டியை பார்வையிட்டு அதன் ஏற்பாடுகளை
விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
உலக மகளிர் டென்னிஸ் போட்டி தமிழக அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும்
இணைந்து வெற்றிகரமாக குறைந்த அளவிலான நாட்களுக்குள் ஏற்பாடுகள் செய்து இன்று
தொடங்கப்பட்டது.
உலகில் இன்றைய தினம் 2.5 கோடி பேர் இன்று நடைபெற்று வரும் போட்டிகளை
பார்வையிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 18 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் வெற்றிபெறும் வீராங்கனைகளுக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்க உள்ளார்.
இனி நடைபெறும் அனைத்து போட்டிகளில் மக்கள் அதிக அளவில் வருவார்கள். குறிப்பாக
வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் அதிக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை மைதானத்தை நோக்கி கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்.
அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் போட்டிகளை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து அரசு, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி வழங்க இருக்கிறோம்.

ஏடிபி டென்னிஸ் போட்டிகள் தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வர, முதலமைச்சரிடம்
தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள்
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட நடவடிக்கைகள் விரைவில்
எடுக்கப்படும்.
முதல்வர் கோப்பையில் கபடி போட்டி மிக பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாற்றுவதற்கான அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறோம்.
இந்த போட்டி நடத்துவதற்கான முக்கிய காரணமே, அடிப்படை மாணவ மாணவிகளும் இந்த
விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக தான் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.







