மாணவர்கள் எதிர்காலம் கருதி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் பள்ளி சூரையாடப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள், மாணவர்களின் சான்றிதழ்களும், பள்ளி வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு முறையான விசாரனை மேற்கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த தனியார் பள்ளியில் 4,500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் கருதி தமிழக அரசு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பள்ளி நீண்ட நாட்களுக்கு மூடியிருந்தால் அவர்களது கற்றல் பாதிக்கப்படும். ஆகவே விசாரணை ஒருபுறம் இருந்தாலும் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பள்ளியை குறைந்த நாட்களுக்குப் பிறகு மீண்டும் செயல்பட தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இதனால், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். ஆகவே தமிழக அரசு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையை விரைந்து முடித்து தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல் ஒரு அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம், தமிழகம் முழுவதும் அரசும், பள்ளிகள் நிர்வாகமும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








