தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நிலை மாற்றப்பட வேண்டும் – அருண் ஹால்தர்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாடு செல்ல தனிப்பாதை உள்ள முறை மாற்றப்பட வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள தேசிய பட்டியலின ஆணைய…

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாடு செல்ல தனிப்பாதை உள்ள முறை மாற்றப்பட வேண்டும் என தேசிய பட்டியலின ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்துள்ள தேசிய பட்டியலின ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர், அந்த ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தினார். அதன் பிறகு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஒன்றரை வருடத்தில் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் இதுவரை 60 வழக்கு தீர்வுக்காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் பட்டியலின மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் இடம் பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அரசு அதிகாரியை சாதியின் பெயரை சொல்லி திட்டியதாக வெளியான ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து தடயவியல் அறிவியல் துறையிடம் அறிக்கை விரைந்து தர கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலினத்தை சாந்தவர் என தமிழ்நாடு தாட்கோ இயக்குனர் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு உறுதி செய்யப்படும். விசாரணையில் தகவல் பொய்யென தெரிய வந்தால் தாட்கோ இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்றும் பல இடங்களில் பட்டியலின மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனி பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது, இது குறித்தான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும் பொழுது தானாக பட்டியலினத்தில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பட்டியலினத்தை சார்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறியவர்களுக்கு பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் ஆகும். இது குறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருவதாக அருண் ஹால்தர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.