போயஸ் தோட்டத்து இல்லத்தில் மிக விரைவில் குடியேற இருப்பதாகவும், வேதா இல்லம் விற்பனைக்கு வருவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீபா வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம் எனவும், அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த வீட்டில் ஜெயலலிதாவும், தனது தந்தையான ஜெயராமனும் வாழ்ந்து வந்ததையும், அந்த வீட்டில் தான் பிறந்ததையும் நினைவு கூர்ந்துள்ள அவர், தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் அந்த வீடு தங்களுக்கே சொந்தம் என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்ததால் அவருக்கு உதவி செய்ய பல பேர் தேவைப்பட்டதாகவும், அவருடன் இருந்து உதவி செய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும், இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய சட்டப்போராட்டத்துக்கு பின் வேதா நிலையம் தங்கள் வசம் வந்துள்ளதாகவும், அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதாக தெரிவித்துள்ள தீபா, கூடிய விரைவில் போயஸ் தோட்ட இல்லத்தில் குடியேற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வேதா நிலையம் விற்பனைக்கு என வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







