ஆயுதப்படை சிறப்பு சட்டத்திற்கு நாகாலாந்து கடும் எதிர்ப்பு

துணை ராணுவ படையினரால் நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகாலாந்து…

துணை ராணுவ படையினரால் நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் ‘திரு’ எனும் பகுதிக்கும் ‘மோன்’ என்கிற பகுதிக்கும் இடையே நிகழ்ந்துள்ளது. நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை “நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்” அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதிகள் எனக் கருதி அவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவத்திற்கு கிடைத்த தவறான தகவலின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடத்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அம்மாநிலத்தின் முக்கிய திருவிழாவான ‘ஹார்ன்பில் திருவிழா’ நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. திருவிழா களையிழந்துள்ளது.

https://twitter.com/Neiphiu_Rio/status/1467780892290699266

இந்நிலையில், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு ராணுவத்திற்கு வழங்கியுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ வலியுறுத்தியுள்ளார்.

“இந்த சிறப்பு சட்டம் ராணுவத்தினருக்கு அதிக அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்த சட்டத்தின்படி பொதுமக்கள் யாரையும் ராணுவத்தினர் வாரண்ட் இன்றி கைது செய்யலாம். வீடுகளை அனுமதியின்றி சோதனையிடலாம். ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு ராணுவத்தினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.” என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

ஹார்ன்பில் திருவிழா

முதலமைச்சர் நெய்பியு ரியோ சார்ந்துள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.