கரூர் அருகே 2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பாலவிடுதி செம்பியாநத்தம் அருகே பூசாரிபட்டி கிராமத்தில், சக்திவேல் என்பவர் தனது மனைவி சரண்யா, மகள்கள் கனிஷ்கா மற்றும் புவிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். அப்போது, தனிக்குடித்தனம் போக வேண்டும் என சரண்யா தன் கணவனிடம் கேட்டதாகவும் இதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சரண்யா தனது 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வெகு நேரமாகியும் அவர்களைக் காணாததால், தேடிய உறவினர்கள் கிணற்றில் சரண்யாவின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சரண்யா மற்றும் மகள் புவிஷாவின் சடலத்தை மட்டும் மீட்ட நிலையில் கனிஷ்காவின் சடலத்தைத் தேடி வருகின்றனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








