நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 13 தொழிலாளர்கள் பலி

நாகாலாந்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 13 நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு வீடு…

நாகாலாந்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 13 நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது தாக்குதல் நடத்தியவர் குறித்தோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதலை துணைராணுவப்படையினர் தவறுதலாக மேற்கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் ‘திரு’ எனும் பகுதிக்கும் ‘மோன்’ என்கிற பகுதிக்கும் இடையே நிகழ்ந்துள்ளது. நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை “நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்” அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதிகள் எனக் கருதி அவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கொன்யாக் நாகா சமூகத்தின் கொன்யாக் ஹோஹோ அமைப்பினுடைய தலைவர் கூறுகையில், “தொழிலாளர்கள் வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள். அதுபோல இந்த சனிக்கிழமையும் இவர்கள் வேன் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 7 பேர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” எனக் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மாவட்ட தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அணுகப் போவதாக உள்ளூர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை பெற உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், “இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்; சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்த எதிர்பாராத தாக்குதல் சம்பவத்திற்கு தனது வருத்தத்தையும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.