ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவர் மரண வழக்கில், தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, வாகன சோதனையின்போது, வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை கீழத்தூவல் காவல்நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக்கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி எஸ்.பாஸ்கரன், மாணவர் மரணம் தொடர்பாக தமிழக காவல்துறை தென்மண்டல ஐஜி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.








