பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக, பழனி கோயிலின் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பழனியில் திட்டத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இதுபோன்ற திட்டங்களால் ஏழைகள், மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். கிராமப்புறங்களில் இருந்து நெடுந்தூரமாக வருவதால் உணவு எடுத்து கொள்ள முடிவதில்லை என்றும் ஆனால் இந்த திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.
திட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தபோது, பழனியில் இருந்து மாணவர்கள் முதலமைச்சருக்கு நன்றி கூறினர். அப்போது, அவர்களை அமர்ந்து பேசும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அடுத்தடுத்த மாணவர்கள், சிற்றுண்டித்திட்டத்தை பற்றி பேசியபோது, அதனை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் முதலில் சாப்பிடுங்கள் என்று அன்பாக கூறியது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நெகிழவைத்தது.









