நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில்…

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக
திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில்
இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் நீர்வாழ் பறவைகளை கணக்கெடுக்கும் பணி
இன்று திருநெல்வேலியில் துவங்கியது. அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, வனத்துறை மற்றும் நம் தாமிரபரணி இயக்கம் சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் 2 நாட்கள் நடைபெறுகின்றன.

இதில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 200 பேர் பங்கேற்று, 7 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக, அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம், கால்தடம் , கூடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் உள்ள குளங்கள், கங்கைகொண்டான் பெரியகுளம், வேய்ந்தான்குளம், நயினார்குளம், மானூர் பெரியகுளம் அரியநாயகிபுரம்குளம், திருப்புடைமருதூர் உள்ளிட்ட 60 குளங்களில் இந்த கணக்கெடுப்பு பணி தொடர்கிறது.

ஐரோப்பா ஊசிவால் வாத்து, ஆலா, செண்டு வாத்து, மஞ்ச மூக்கு தாரா, நாம கோழி, நீர் காகம் ஆகிய பறவையினங்களை காண முடிந்ததாக பறவைகளை கணக்கெடுக்கும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த கணக்கெடுப்பின் நோக்கம், நீர்நிலைகள் மற்றும் அதில் வாழும் பல்லுயிர்களை பாதுகாப்பதுதான் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.