திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கு தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருச்சி நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடல் உடற்கூறு சோதனைக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து சோழமாதேவியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், பூமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இறுதி யாத்திரை நடைபெற்றது. மயானத்தில் காவலர்கள் சூழ்ந்திருக்க, 3 சுற்றுகளாக 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என கூறப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பிடிபட்டுள்ளனர்.
கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஆடுகளை திருடும் தொழிலை பல வருடகாலமாக செய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது. கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த திருச்சி தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.








