ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் ஆபாசமாக நடனமாடிய அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேற்றி கடனை செலுத்துவார்கள்.

மேலும் மாதம்தோறும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள். தொடர்ந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் கோமதிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்டோர் வீட்டில் அறை நிர்வாண கோலத்தில் மது போதையில் ஆபாச நடனம் ஆடுவதும், பெண் பக்தர்களின் முகத்தில் திருநீர் வீசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்து முன்னணி சார்பில் கோயில் நிர்வாகிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலருமான சக்கரை அம்மாள், தற்காலிக அர்ச்சகர்கள் (கோமதிநாயகம், வினோத், கணேசன்) மூன்று பேரையும் கோயிலுக்கு வரக்கூடாது என எச்சரித்து எழுதி வாங்கியுள்ளார். மேலும் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் அர்ச்சகர்கள் மூன்று பேர் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.