ஸ்ரீரங்கம் பெரியார் சிலை; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு!

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாகத்…

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “கடந்த 1-ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் எனப் பேசினார்.

ஏற்கனவே 2006-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தைத் தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல் கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அண்மைச் செய்தி: ‘‘தொடர்ந்து கிராமத்துப் படங்கள் பண்ண ஆசையாக உள்ளது’ – நடிகர் கார்த்தி’

இந்த புகார் தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியத் தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்யத் தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கனல் கண்ணனைக் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் மதுரவாயல் வீட்டில் சென்று தேடி உள்ளனர். ஆனால், அங்கு அவர் இல்லாததால், வடபழனி, வளசரவாக்கம் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கும் அவர் இல்லாததால், தலைமறைவாகி விட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.