முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?


ஜெயகார்த்தி

கட்டுரையாளர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு இருக்கும் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கனல் கண்ணனின் இந்த பேச்சு, அதற்கான எதிர்வினை குறித்து முழுமையாகப் பார்ப்போம். இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற “இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயண”த்தின் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளர் கனல் கண்ணன பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

கனல் கண்ணன் பேசியது என்ன?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் ,

“ஸ்ரீரங்கநாதனின் கோயிலுக்கு சென்று தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள். ஆனால் அந்த கோயிலுக்கு எதிரே உள்ள கடவுள் மறுப்பாளரின் சிலையை உடைக்கும் நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என்று கனல் கண்ணன் ஆவேசமாக பேசி முடிக்கிறார். இந்த சர்ச்சை பேச்சு தொடர்பான காணொலி தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி பேசு பொருளாக மாறியது. கனல் கண்ணன் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எதிரொலிக்கத் தொடங்கியது.

அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

கனல் கண்ணனின் சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கனல் கண்ணன் பேச்சு தொடர்பாக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதே போல் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற வகையில் கனல் கண்ணன் பேசி இருப்பதாகவும், அவருடைய பேச்சு அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வன்முறை பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பேச்சு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பேச்சு என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கின்ற இதுபோன்ற சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒதுக்க வேண்டும் என்றம் கே.எஸ். அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கனல் கண்ணன் பேச்சுக்கு அண்ணாமலை வரவேற்பு

அதேநேரத்தில் கனல் கண்ணன் பேச்சை கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையிலும் வரவேற்பதாக பாஜக தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர் என்ற போர்வையில் சிவபெருமானை அவமானப்படுத்தியவர்களை எல்லாம் முதலமைச்சர் சந்தித்து பேசுவதாகவும், அவர்கள் பேசுவது கருத்து சுதந்திரம் என்றால், கனல் கண்ணன் பேசியதும் அப்படித் தான் என்று விளக்கம் அளித்தார்.

கனல் கண்ணன் பேசியது தவறு என்றால், பல்வேறு மேடைகளில் திமுகவினர் கடவுளையும் பெண்களையும் அவமதித்து பேசியது மிகப்பெரிய பாவம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். பெரியார் சிலையை கோயிலுக்கு முன்னால் அமைக்காமல் வேறு இடத்தில் அமைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் கனல் கண்ணன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

கனல் கண்ணனுக்கு எதிராக புகார்

இதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்தனர். மாவட்ட செய்லாளர் குமரன் அளித்த புகாரில், 2006-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது என்றும் அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் வலியுறுத்தினர். புகாரைப் பெற்றுக்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,

இந்தியத் தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்யத் தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்

ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கனல் கண்ணனை தேடி வருகின்றனர்.

எது கருத்து சுதந்திரம்?

கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் இந்தியாவில் பலரும் பேசுவது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா பேசியது பெரும் சர்சையானது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நுபுர் ஷர்மாவின் கருத்து, நாட்டில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டதாக கருத்து தெரிவித்தனர். உடனடியாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

15 ஆண்டாக நடைபெறும் வழக்கு!

கனல் கண்ணன் மீது பதியப்பட்டுள்ள பிரிவுகளின் அடிப்படையில் பார்த்தால், அவரது பேச்சின் அடிப்படையில் கலகம் நிகழ்ந்தால் ஒரு வருட தண்டனையுடனும், கலகம் நிகழாவிட்டால் 6 மாதம் வரை நீட்டிக்கப்பட கூடிய தண்டனையும் விதிக்கப்படலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சிலை உடைக்கப்பட்ட வழக்கு கூட இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது.

நல்லிணக்கம் பேணுவோம்

ஆகவே பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்க்காமல், சமூகப் புரட்சியாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகப் போராடிய தலைவராகவும் பார்க்க வேண்டியது அவசியம். எப்போதும், எந்தச் சூழலிலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின், தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அம்சமாக இருக்கிறது. அதையே, மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர்களாக விளங்குபவர்கள்  பின்பற்றுவதும், சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதும் அவசியமானது. அப்போது தான்  தமிழ்நாடு எப்போதும் போல் அமைதிப் பூங்காவாக விளங்கும்.

ஸ்ரீரங்கம் பெரியார் சிலையின் வரலாறு பற்றி படிக்க – ஸ்ரீரங்கமும் பெரியாரும்; வரலாற்றுப் பின்னணி!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாராட்டுக்களால் மகிழ்ச்சியடைகிறேன் – முதலமைச்சர் நெகிழ்ச்சி

Dinesh A

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்?

Vandhana

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar