திருச்சி அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து 9ம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்துகுறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரங்கநாதரின் இந்த எழில் மிகு திருக்கோலத்தை காண்பதற்காக அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி அரங்கநாதர் கோவில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. இந்த விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். பகல் பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளுவார். பகல் பத்து உற்சவத்தின் 9ம் நாளான இன்று நம்பெருமாள் உடல் முழுவதும் முத்துகளால் தைக்கபட்ட ஆடை அனிந்து முத்து குறி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டபோது ரங்கராஜா, கோவிந்தா என்று பக்தி பரவசத்தில் பக்தர்கள கோஷமிட்டனர். ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் பின்னர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாள் முத்தாங்கி சேவையில் காட்சியளித்தார்.
திருச்சி அரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. பெருமாள் பெண்ணாக உருவெடுத்த நாச்சியார் திருக்கோலம் என்கிற மோகனி அலங்காரம் நாளை காலையும் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 2ம் தேதி அதிகாலையும் நடைபெற உள்ளது.







