இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணிக்கு 263 ரன்கள், இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதனால்,…

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணிக்கு 263 ரன்கள், இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட அங்கு சென்றுள்ளது. இதனால், ஷிகர்தவான் தலைமையிலான இந்திய 2 ஆம் தர அணி, இலங்கை அணியுடன் விளையாட அங்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி- 20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி,
கடந்த 13 ஆம் தேதி தொடங்க இருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய இலங்கை அணியில், பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் உட்பட 2 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டதால், இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டு இன்று தொடங்கியது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவும் இஷான் கிஷனும் அறிமுக வீரர்களாக சேர்க்கப் பட்டுள்ள னர். இலங்கை அணியில் பனுக ராஜபக்சே அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

டாஸ் வென்ற இலங்கை அணியின் புதிய கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்னா ண்டோ, மினோத் பனுகா களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 49 ரன்களாக இருந்தபோது, அவிஷ்கா, சாஹல் சுழலில் மணிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 32 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த அறிமுக பனுகா ராஜபக்சே அதிரடியாக ஆடினார். 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தவர்களில் தனஞ்செயா டி சில்வா 14 ரன்களிலும் சரத் அசலங்கா 38 ரன்களும் தசுன் ஷனகா 39 ரன்களும் வனிந்து 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், சமிந்தா கருணா ரத்னே 3 பந்துகளில் 43 விளாச, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீபக் சாஹர், சாஹல், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. ஷிகர் தவானும் பிருத்வி ஷாவும் தொடக்க ஆட்டக்காரர் களாக களமிறங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.