பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கொரோனா பொது ஊரடங்கில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதற்கு இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடைசி கட்ட புள்ளிவிவரத்தின் படி கேரளாவில் புதிதாக 16,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17ம் தேதி ஒரு நாளில் மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றுவோர் விகிதம் 10.76% ஆக இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பக்ரீத் பண்டியை முன்னிட்டு கேரளாவில் 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“பக்ரீத் பண்டிகைக்கு கேரள அரசு தளர்வுகள் அறிவித்திருப்பதன் வாயிலாக கொரோனா தொற்று மூன்றாவது அலை விரைவில் வருவதை தவிர்க்க முடியாதது ஆகிவிடும். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உத்தரவை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால் கேரள அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்.
கேரளமாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் கூட்டம் கூடுவது குறித்து பிரதமர் மோடி கவலையுடன் எச்சரிக்கை விடுத்திருப்பதை மீறி, பல்வேறு மாநிலங்கள் பக்தர்களின் யாத்திரைகளை ரத்து செய்துள்ள நிலையில் கேரள அரசின் முடிவு வலி தருவதாக இருக்கிறது.
ஜம்மு&காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பக்தர்களின் யாத்திரை நிகழ்வுகளை பொதுமக்கள் நலனைக் கருதி ரத்து செய்துள்ளன. இந்த சூழலில் கேரள அரசு இந்த முடிவை எடுத்திருப்பது எதிர்பாராத ஒன்றாகும்.” இவ்வாறு இந்திய மருத்துவர் சங்கம் கூறியுள்ளது.







