ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் அதாவது இயேசு உயிர்ப்பு பெருவிழாவின் போது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன. 3 கிறித்தவ தேவாலயங்களிலும், 3 ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 8:30 தொடங்கி 9:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன.
இந்த தாக்குதலில் 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைத் தடுக்க அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மைத்திரிபால சிறிசேனா ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அன்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, அதே நேரத்தில் “பொறுப்பற்ற” உளவுத்துறை தோல்வியையும் சுட்டிக்காட்டியது.
இது மட்டுமின்றி பாதிக்கப்பட்டோர் நிதியம் ஒன்று நிறுவப்பட வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நியாயமான மற்றும் சமமான முறையில் இழப்பீட்டு தொகைகளை வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், காவல்துறை முன்னாள் தலைவர், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர், புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் அரசிற்கு 20 கோடி ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை ஆறு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
அதன்படி, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக இதுவரை 10 கோடி ரூபாயில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரா உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா








