அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். முதலில் அவரது பதவிக்காலம் 2…

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். முதலில் அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்யணம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அவரது பதவிக்காலம் இரண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றப்பட்டது.

பின்னர் நவம்பர் 2021ம் ஆண்டு அவருக்கு இரண்டாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடியும் முன்பே மத்திய அரசு எஸ்.கே.மிஸ்ராவிற்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது. அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 31-ம் தேதியுடன் முடிய உள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஏற்கெனவே இருக்கும் அதிகாரியை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெயா தாக்கூர் மற்றும் சாகேத் கோகலே உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை அழித்துவிட்டதாக ஜெயா தாக்கூர் தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.

“பணமோசடி தொடர்பான சில முக்கியமான விசாரணைகளை மிஸ்ரா மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும் தேசத்தின் நலனுக்காக அவரது பதவியை நீட்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.” என்று எஸ்.கே.மிஸ்ராவின் சார்பாக துஷார் மேத்தா கூறினார்.

 

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதன்படி எஸ்.கே.மிஸ்ராவின் மூன்றாவது ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும், மேலும் அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவி காலத்தை குறைத்து, ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே அவர் பதவியில் நீடிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.