இலங்கை – யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் புத்த விகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் ராணுவம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கல் நடைபெற்று வருவதாக தமிழர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் இடிக்கப்பட்டதாக அங்கு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பிரசித்தி பெற்ற கீரிமலை பகுதியிலுள்ள சிவன் கோயில் உடைக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்படுவடுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருநாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இதை மறுத்த இலங்கை ராணுவம், பின்னர், ராணுவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த விகாரம் அகற்றப்பட்டதாக அறிவித்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் 1990களில் தமிழர்கள் வெளியேறிய பின்னர், இலங்கை ராணுவம் கையகப்படுத்திய இடங்களை அதி உயர் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அப்படி அறிவிக்கப்பட்ட தையிட்டி-யில் அதி உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அங்கு, தமிழர்களுக்கு சொந்தமான இடங்களில், ராணுவத்தினர் பௌத்த விகாரை அமைத்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. தமிழர் நிலங்களை கையகப்படுத்தி, அங்கு புத்த விகாரம் மற்றும் சிங்களர்களை குடியமர்த்த இப்போதும் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் அங்கு தமிழர் விரோத நடவடிக்கைளை சிங்கள ராணுவத்தினர் தொடர்வதாக தமிழ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 3ம் தேதி பருத்தித்துறை – காங்கேசன்துறை பிரதான வீதியில் கையிட்டி – கலைவாணி வீதியிலிருந்து தொடங்கிய போராட்ட பேரணி, புத்த விகார் நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன், எம்.ஏ.சுதந்திரன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தையிட்டு புத்த விகார் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் ராணுவத்தினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்புகள், முள் வேலிகளை அமைத்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்த விகாரையை அடுத்த மாதம் 3ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகளை ராணுவத்தினர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் “நீதிமன்ற உத்தரவை மீறி நடமாடினால் கைது செய்வோம் என பலாலி போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு குறித்து போலீசாருக்கு புரியாமல் பேசுகின்றனர். நடமாட முடியாது எனில், போராட்ட களத்திற்கு வருகை தர ஒரு ஹெலிகொப்டரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.







