அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழை நீரில் நனைந்து நாசமாகின.
பெரியக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் உட்பிரகாரத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் காணிக்கையை செலுத்த தற்காலிக உண்டியல் இந்து சமய அறநிலையத் துறையினர் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பிய உடன் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணப்படும் நிலையில், இன்று மூன்று மாதங்களுக்குப் பிறகு, காலை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்களை திறந்து எண்ணத் தொடங்கினர்.
அதில், கடந்த முறை பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக ரூபாய் 500 மற்றும் 100 நோட்டுகள் என பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் முழுவதும் மழை நீரில் தேங்கி நனைந்து நாசமானது.
பொதுவாக உண்டியல் பணம் எண்ணுவதற்கு இவ்வளவு காலத்தில்தான் என்ன வேண்டும் என்ற வரையறை இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் அதிகாாிகளின் அனுமதிப் பெற்று எண்ணலாம். தற்போது, செயல் அலுவலராக கலைச்செல்வி என்பவர் வந்து 20 நாட்கள் தான் ஆகின்றன. எனவே, கடந்த முறை செயல் அலுவலராக இருந்த வேதமூர்த்தி அப்பொழுதே உண்டியல் பணத்தை எண்ணியிருந்தால் இவ்வளவு பணம் அதுவும் பக்தர்களின் காணிக்கை பணம் வீணாகி இருக்காது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
—கே.ரூபி










