பிளவு திரை – பிகினிங் ஒரு நல்ல பிகினிங்!

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’பிகினிங்’ திரைப்படம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்துள்ளது. ஒரு திரையில் பல்வேறு கதைகள் வெளிப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் திரையில் பிளவுடன் இரு கதைகளை ஒரே…

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’பிகினிங்’ திரைப்படம், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்துள்ளது.

ஒரு திரையில் பல்வேறு கதைகள் வெளிப்படுவதை பார்த்திருப்போம். ஆனால் திரையில் பிளவுடன் இரு கதைகளை ஒரே நேரத்தில் கூறும் படத்தை பார்த்திருப்போமா என்பது சந்தேகம் தான். அப்படி இரு வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய படம் தான் பிகினிங். இப்படத்தில் ரோகினி, கௌரி, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இடது பக்க திரையில் ரோகினி மற்றும் அவருடைய மகன் வினோத் கிஷன் வருகின்றனர். வினோத் கிஷன் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். அவரை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு வேலைக்கு செல்வது ரோகிணியின் வழக்கம். வலது பக்க திரையில் கௌரி 3 நபர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைக்கப்படுகிறார்.

அந்த அறையில் ஒரு பழைய செல்போன் கௌரி கையில் கிடைக்கிறது. அதன் மூலம் உதவி கேட்க பல எண்களை தொடர்பு கொள்ள முயல்கிறார். அப்போது வினோத் எண்ணுக்கு தொடர்பு கிடைக்கிறது. மாற்றுத்திறனாளியான வினோத், கௌரிக்கு உதவினாரா என்பது தான் கதை.

முக்கிய வேடத்தில் நடித்துள்ள வினோத், குழந்தைத்தனமாக பேசுகிறார். சொல்லுவதையே திருப்பி சொல்லுவது, மழலை பேச்சு என அற்புதமாக நடித்திருக்கிறார். கதையின் வலது பக்க திரையின் நாயகியான கௌரி தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். பிளவுபட்ட திரை ஒன்றாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு காண்போரை கதைக்குள் புகுத்துகிறது.

திரும்ப திரும்ப ஒரே இடம் ஒரே நடிகர்கள் வந்தாலும் வீரக்குமாரின் ஒளிப்பதிவு திருப்தியளிக்கிறது. கதையில் ஒரு சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது. இருந்தாலும் புதுவிதமாக கதையை மக்களுக்கு கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா. இப்படிப்பட்ட புதிய தொடக்கம் இயக்குநர் ஜெகன் விஜயாவிற்கு நல்ல பிகினிங்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.