சென்னை வந்தடைந்தது சிறப்பு ரயில் : 8 பேருக்கு மட்டுமே காயம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

ஒடிசாவிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது.   இந்த வந்த பயணிகளில் 8 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக…

ஒடிசாவிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது.   இந்த வந்த பயணிகளில் 8 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி  மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த கோர விபத்தில் பகல் 2 மணி நிலவரப்படி  288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 90 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 48 ரயில்களின் வழைத்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சிறப்பு ரயில் மூலம் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை வந்தடைந்தனர்.  இந்த சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்த பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்த பிறகு அவர்களின் காயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் இருந்தன. மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்தார்.

மொத்தமாக இந்த சிறப்பு ரயிலில் 280 பேர் வந்ததாகவும், அதில் பாதி பேர் வரும் வழியில் இறங்கி விட்டதாகவும், 1 37 பேர் சென்னை வந்ததாகவும், எட்டு பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்தார். எட்டு பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..

” ஒடிசாவில் இருந்து நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று சென்னைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக என்னையும் வருவாய் துறை அமைச்சர்களையும்  அழைத்து நேரில் சென்று பாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்‌. சிறப்பு ரயிலில் வருவோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதையும் உறுதி செய்ய உத்தரவிட்டார்.

6 மருத்துவமனைகளில்  அவசர சிகிச்சைக்கு 207 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். 250 சாதாரண படுக்கை தாயார் நிலையில் உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 மருத்துவர்கள் 6 குழுக்களாக இருந்தார்கள்.
மேலும் மருத்துவமனைகளில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தார்கள்.

137 பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர்‌. 8 பேர் காயமடைந்த நிலையில் சென்னைக்கு வந்தார்கள். அவர்களை பரிசோதித்து தேவையான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை வந்த யாருக்கும் அதிதீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் நிலையில் இல்லை. சென்ட்ரல் ரயில் நிலையில் நிலையத்தில் இருப்பது போல விமான நிலையத்திலும்.. மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு என்பது பெரிதளவில் ஏற்படவில்லை”  என  மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.