” ரயிலின் ஜன்னல் கம்பியை பிடித்திருந்ததால் உயிர் தப்பினேன்..” – சென்னை பயணி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

விபத்தான ரயிலில் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் என கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த சென்னை பயணி தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு…

விபத்தான ரயிலில் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் என கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த சென்னை பயணி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி  மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த கோர விபத்தில்   288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர்
அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா
சென்றுள்ளார். கொல்கத்தாவிலிருந்து அவர் கோரமண்டல் ரயிலில் சென்னை திரும்பியுள்ளார்.

இந்த ரயில் விபத்து குறித்து அவர் கூறுகையில்..

“ S2 பெட்டியில் 250 மேற்படோர் பயணித்தோம். மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து ரயில் புறப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், பெட்டிகள் சரிய துவங்கியது. 10 நொடியில் அனைத்தும் முடிந்து ஒய்ந்தது போன்று இருந்தது.

அனைவரும் அலறிஅடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினர். நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்தோம். நான் இருந்த பெட்டியில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஜன்னல் கம்பியை பிடித்ததால் காயம் ஏதுமின்றி நான் உயிர் தப்பினேன். பின்னர் வெளியே வந்தோம்.

சுற்றிலும் இருட்டாக இருந்தது எந்தனை ரயில் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை. பலர் உடல் சிதறி உயிர் இழந்து இருந்தனர். அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்கள் என பார்த்தேன். பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பேருந்து மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். என்னுடைய நிலை குறித்து  ரயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் அடிக்கடி விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.