” புவனேஸ்வருக்கு விமான கட்டணத்தை உயர்த்தக் கூடாது “ என விமான போக்குவரத்து அமைச்சகம் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ள நிலையில் புவனேஸ்வரில் இருந்தும் மற்றும் புவனேஸ்வருக்கு செல்லும் விமானங்களின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் புவனேஸ்வர் நகருக்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கும் செல்வதற்கு விமானத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் புவனேஸ்வர் நகருக்கு செல்லும் விமானம் மற்றும் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.







