தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் கோபால், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், காவல்துறையினர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ”சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் சென்னையிலிருந்து செல்வதற்கு 38,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் வெளியேறுவதற்கும், திரும்புவதற்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்த புகார்களுக்கு 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம்.
பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்படும். ஊழியர்களுக்கு ஆவின் மூலமாக இனிப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் பட்டாசு கொண்டு செல்ல அனுமதி கிடையாது” என்று தெரிவித்தார்.








