உடல் நலக்குறைவால் மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நாளை அவரின் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை நேற்று தெரிவித்தது.
இந்நிலையில் இன்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த முலாயம் சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான சைபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு இன்று எடுத்து செல்லப்படுகிறது. இதைதொடர்ந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு சொந்த ஊரிலேயே அரசின் முழு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.








