சோனியாவுக்கு மூச்சுக் குழலில் பூஞ்சை தொற்று பாதிப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாக காந்தி கொரோனா தொற்று பாதிப்புடன் டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூச்சுக் குழலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாக காந்தி கொரோனா தொற்று பாதிப்புடன் டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூச்சுக் குழலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவருக்கு மூச்சுக் குழலில் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

முன்னதாக நேஷனல் ஹெரால்ட் பண மோசடி வழக்கில் விசாணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த 8ம் தேதி அமலாக்கத்துறை சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வருவதால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கால அவகாசத்தை அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில் வரும் 23ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என மீண்டும் அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்திருக்கிறது. இதற்கிடையில் சோனியாவின் மகனும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.

கடந்த 2010ல் அசோசியட் ஜார்னல்ஸ்க்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. இதில் பெரிய அளவில் பண மோசடி ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.