காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக சோனியா காந்தி தொடர்வதாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக தான் தொடர்வதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2019ல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவராக தற்போது வரை தொடர்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கட்சியின் புதிய தலைவர் அதற்கான தேர்தல் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க இந்த காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டது. இதில், தொடர்ந்து கட்சி தலைவராக நானே இருக்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்தார். மேலும், நாட்டின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல், எரிவாயு என அனைத்தின் விலைகளும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு மத்திய அரசே காரணம் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக நடந்து வரும் தொடர் தீவிரவாத தாக்குதல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. அங்குள்ள மக்கள் சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் முழுதாக நம்புவதற்கு போதிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்தார்.