மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்துவது நிரூபணமாகும் பட்சத்தில் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு ‘ஜீரோ கவுன்சிலிங்’ நடத்த வாய்ப்பில்லை, ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது தான் ஆசிரியர்களின் பணி. ஆனால், சில இடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அது உண்மை என நிரூபணமாகும் பட்சத்தில் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்பொழுதும் போல தொடர்ந்து இயங்கும்.
நீட் தேர்வு சம்பந்தமாக ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்றாலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராமல் இருந்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும். முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம் என கூறினார்.