”தமிழை நேசிக்கிறேன்” – திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி

“தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னை நகரின் மீது எனக்கு அதீத ஈடுபாடு உண்டு எனவும் திருக்குறளை மேற்கோள்காட்டியும்  பிரதமர் மோடி உரையாற்றியனார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு…

“தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னை நகரின் மீது எனக்கு அதீத ஈடுபாடு உண்டு எனவும் திருக்குறளை மேற்கோள்காட்டியும்  பிரதமர் மோடி உரையாற்றியனார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக தனி விமான மூலம் இன்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து  பழைய விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு கார் மூலமாக சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு  புதிய முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு கடற்படை தளத்திற்கு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து  சென்னை-கோவை  இடையே முதன்முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்கமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது..

” வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் வந்து விவேகானந்தர் இல்லத்தை பார்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் இந்த இல்லத்தில்தான் தங்கி இருந்தார். மேற்கில் தனது பயணத்தை முடித்துவிட்டு  இந்த இல்லத்தில்தான்  விவேகானந்தர் தங்கி இருந்தார்.

ராமகிருஷ்ணா மடம் தமிழ்நாட்டில் பல சேவைகளை முன்னிறுத்தி வருகிறது. தமிழகம் விவேகானந்தருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள உலக புகழ் பெற்ற பாறையில் தான் விவேகானந்தர் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்து கொண்டார்.

அதனுடைய வெளிப்பாடு தான் சிக்காகோவில் அவர் ஆற்றிய உரை. சிக்காகோவில் இருந்து இந்தியா வந்த அவர் நேராக தமிழகத்திற்கு வந்து தான் கால் பதித்தார். தமிழகம் வந்த அவரை ராமேஸ்வரத்தின் மன்னரே வந்து வரவேற்றார்.


விவேகானந்தர் விட்டு சென்ற பணியை, இவ்வளவு ஆண்டுகளாக சுயநலம் இல்லாமல் ராமகிருஷ்ணா மடம் செய்து வருகிறது. இந்த நேரத்தில் காசி தமிழ் சங்கம் அடைந்த வெற்றியை நாம் அனைவரும் நினைவு கூற வேண்டும். காசி தமிழ்ச் சங்கம் போலவே தற்போது சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமும் நடைபெற்று வருகிறது.

ஒற்றுமை உணர்வை வளர்க்கும் இது போன்ற அனைத்து முன்னெடுப்புகளும் வெற்றி பெறும். இந்திய ஒருமைப்பாட்டிற்கான அனைத்து விஷயங்களையும் நான் வரவேற்கிறேன். நமது அரசாங்கத்தின் நிர்வகிப்பதற்கான தத்துவங்களையும் கொள்கைகளையும் விவேகானந்தரிடம் இருந்துதான் பெறப்பட்டது. தமிழை நேசிக்கிறேன். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னை நகரின் மீது எனக்கு அதீத ஈடுபாடு உண்டு.

Imageவளர்ச்சி என்பது முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும், வளர்ச்சிக்கான பாதை தற்பொழுது அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கு அதிக அளவிலான கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த சிறு குறு தொழில் முனைவோர் அதிக அளவில் பயன்பெற்று உள்ளார்கள்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.