டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த காற்று மாசுக்கு விவசாயிகளும், பாஜகவினரும்தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையையொட்டி டெல்லியில் பட்டாசுகள் விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆனாலும், காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தது. இதனால் டெல்லியை நச்சுத்தன்மை வாய்ந்த மேகங்கள் சூழ்ந்துள்ளன.
டெல்லி முழுவதும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், வேண்டுமென்றே சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அவர்களை பாஜகதான் தூண்டியுள்ளது என டெல்லி சுற்றுச் சூழல் அமைச்சர் கோபால் ராய் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் வேளாண் கழிவுகளை எரியூட்டுவதன் காரணமாகவும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என ராய் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. காற்று மாசு PM2.5 என்கிற அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.
லோதி சாலை டெல்லியின் மிக முக்கியப்பகுதியாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் இன்று பிற்பகல் நிலவரப்படி PM2.5 அளவு 394 ஆக பதிவாகியுள்ளது. மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம் மற்றும் அமெரிக்க தூதரகம் பகுதியில் இந்த அளவு 416 மற்றும் 399 என பதிவாகியுள்ளது.
PM2.5 அளவின் படி 301-500 என்கிற அளவில் காற்றில் மாசு கலந்திருந்தால் அது நச்சு காற்றாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள மாசுக்களை அகற்ற டெல்லியில் பல இடங்களில் நீர் தெளிக்கும் இயந்திரங்களை பொதுப்பணித்துறை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









