பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என திமுக பொது செயலாளரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த அக்.29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர், ரோஷி அகஸ்டின், வருவாய் துறை அமைச்சர் ராஜன் மற்றும் இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோருடன் தமிழ்நாடு சார்பாக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின் உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
அணை திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தண்ணீர் திறக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுத்துவிட்டதாக தேனியில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல லோயர் கேம்ப் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னணியில், முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்கிற முறையில் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தேன். கொரோனா காலம் என்பதால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.
அடுத்தடுத்து தமிழ்நாட்டில் உள்ள அணைகளை ஆய்வு செய்ய உள்ளேன். முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன் பேபி அணையை சீரமைக்க வேண்டும். பேபி அணை விரைவில் சீரமைக்கப்படும்.
அதேபோல முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு இ.பி.எஸ் – ஒ.பி.எஸ்க்கு தார்மீக உரிமை இல்லை. அதிமுக ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணை ஆய்வு செய்யப்படவில்லை. 80 வயதிலும் நான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன்.
கேரள அரசும் – தமிழ்நாடு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும். பிரனாயி விஜயன் முதல்வராக இருக்கும் காலத்தில் முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.








