பிரம்மாண்டங்களுக்கு பஞ்சம் இல்லாத தமிழ் சினிமாவில், திரைப்படங்களை போலவே சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். அனால் தற்போது தமிழ் சினிமா சுருங்கி ட்விட்டர் ஸ்பேசஸ் நோக்கி நகர தொடங்கி விட்டது.
படப்பிடிப்பு தொடங்கி, இசை வெளியீட்டு விழா, திரைப்பட வெற்றி விழா என, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பல கோடிகள் வரை செலவு செய்யப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால், கடந்த இரண்டாண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது சினிமா துறை. இதன் எதிரொலியாக, நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற சினிமா இசை நிகழ்ச்சிகள், தற்போது சுருங்கி சமூக வலைதளமான ட்விட்டரில் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெகமே தந்திரம் திரைப்படத்தின் இசை கடந்த 7ஆம் தேதி ட்விட்டரில் வெளியிடப்பட்டது. அன்று மாலையே ஜெகமே தந்திரம் படக்குழு ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக, ரசிகர்கள் மத்தியில் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டது. படத்தின் நாயகன் தனுஷ் பேசும் போது மட்டும், கிட்டத்தட்ட 17 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரது பேச்சை கேட்டனர். ட்விட்டர் ஸ்பேசஸ் இந்தியாவில் அறிமுகமான பிறகு, அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும்.
ட்விட்டர் ஸ்பேசஸ் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், தனுஷை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் மற்ற பணிகளில் படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் ஜீன் 21 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், திரைப்பட நிகழ்ச்சிகள் ட்விட்டர் ஸ்பேசஸ் போன்ற இணையதளத்தில் கொண்டாப்படுவது தமிழ் சினிமாவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தயாரிப்பு நிறுவனங்கள் இதை ஊக்குவிக்க கூடாது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







