கமல்ஹாசன் தலைமையில் சினேகன் திருமணம்: நடிகையை கரம்பிடித்தார்

கவிஞர் சினேகன் திருமணம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் இன்று நடந்தது. பிரபல பாடலாசிரியர் சினேகன். இவர், ’ஞாபகம் வருதே’(ஆட்டோகிராப்), ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு), ஐயையோ (பருத்திவீரன்)…

கவிஞர் சினேகன் திருமணம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் இன்று நடந்தது.

பிரபல பாடலாசிரியர் சினேகன். இவர், ’ஞாபகம் வருதே’(ஆட்டோகிராப்), ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு), ஐயையோ (பருத்திவீரன்) உட்பட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். ‘யோகி’ படம் மூலம் நடிகரான அவர் ‘உயர்திரு 420’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமான சினேகன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

இவரும் நடிகை கன்னிகா ரவியும் காதலித்து வந்தனர். நடிகை கன்னிகா, ’தேவராட்டம்’, ’அடுத்த சாட்டை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் ’ராஜவம்சம்’ படத்திலும் நடித்துள்ள கன்னிகா, ’கல்யாண வீடு’என்ற டிவி தொடரிலும் நடித்துள்ளார்.

இவர்கள் திருமணம், வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை நடந்தது. கமல்ஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க, சினேகன் மணமகளுக்கு மூன்று முடிச்சு போட்டார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உட்பட ஏராளமான திரையுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.